Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
இந்தியா

இந்தியா (22)

73-வது சுதந்திர தின விழா - ஆறாவது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி

நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து செங்கோட்டை வந்தடைந்து தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோட்டையில் கொடியேற்றிவிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் நாட்டில் உள்ள அனைத்துச் சகோதர சகோதரிகளும் மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என விரும்புகிறேன். நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பலர் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இன்று நான் அனைவரையும் நினைவுகூர விரும்புகிறேன். சுதந்திர தினம் கொண்டாடப்படும் இதே நாளில் பல மாநிலங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

எங்கள் புதிய அரசு பதவியேற்று பத்து வாரங்கள் கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், இந்தக் குறுகிய காலத்தில் ஒவ்வொரு துறையிலும் நாங்கள் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப்பிரிவான 370, 35A -வை நீக்கியது சர்தார் வல்லபபாய் படேலின் கனவை நனவாக்கும் முதல் படி. நாங்கள் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்றி அதன் மூலம் இஸ்லாமியப் பெண்களுக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளோம். இந்த அரசு விவசாயிகளுக்காக வேலை செய்கிறது. உதவித் தொகை மற்றும் ஓய்வூதியங்கள் வழங்குவதன் மூலம், இந்த அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்காக வேலை செய்துள்ளது.

நீர் பற்றாக்குறையைப் போக்க ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 2013-14-ம் ஆண்டுகளில் நாட்டின் உணர்வைப் புரிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன். இந்த தேசத்தை மாற்ற முடியுமா என அனைவரும் நினைத்தார்கள். ஆனால் இந்த ஐந்து வருடக் கடின உழைப்புக்குப் பிறகு 2019-ம் ஆண்டு ஒட்டு மொத்த தேசமும் எங்கள் பணிக்குச் சாட்சியாக இருக்கிறது. இப்போது மக்களின் உணர்வு மாறி "என் தேசம் நிச்சயம் மாறும்" என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

என்னாலும் தேசத்தை மாற்ற முடியும் என அனைத்துத் தனி மனிதர்களும் சிந்திக்கின்றனர். நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் நம்பிக்கை, எங்களுக்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. இந்த முறை நடந்த தேர்தலில் எந்த அரசியல் தலைவர்களும் போட்டியிடவில்லை. எம்.பியும் இல்லை, மோடியும் இல்லை. ஆனால் இந்திய மக்கள் தங்களின் கனவுகளுக்காக, ஆசைகளுக்காகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர். ஓர் அரசாக பிரச்னைகளை அதன் வேரிலிருந்து அகற்ற முயற்சி செய்கிறோம். முத்தலாக் மூலம் பல இஸ்லாமிய பெண்கள் தாழ்த்தப்பட்டு, சுதந்திரமில்லாமல் இருந்தனர். பல இஸ்லாமிய நாடுகளில் எப்போதோ இந்தச் சட்டம் தடை செய்யப்பட்டுவிட்டது. சில காரணங்களால் இந்தியாவில் அதை ஒழிக்கவில்லை. ஆனால் முத்தலாக் மசோதாவுக்கு எதிராக ஏன் குரல் எழுப்பக் கூடாது என நினைத்து இதைச் செய்து முடித்துள்ளோம்.

ஜனநாயகத்தின் உணர்வாக, அம்பேத்கரின் உணர்வாகச் சிறப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் பிரச்னைகளை புறக்கணிக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் ஆட்சி செய்த எந்த அரசும் செய்யாததை, புதிதாகப் பதவியேற்றுள்ள எங்கள் அரசு வெறும் 70 நாளில் செய்து முடித்து, இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரம் குறித்த எனது யோசனை என்னவென்றால், அரசாங்கம் மெதுவாக மக்களின் வாழ்க்கையிலிருந்து வெளியேற வேண்டும். இதனால் மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்த வேண்டும். மக்களின் வாழ்வில் அரசின் எந்தக் குறுக்கீடும் இருக்கக் கூடாது. அதிக தேவையின் போது மட்டுமே அரசு செயல்படவேண்டும். கடந்த 70 வருடங்களில் நாம் 2 ட்ரில்லியன் டாலர் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளோம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளோம். வருங்காலத்தில் இதை ஐந்து ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையை இது எனக்கு வழங்கியுள்ளது.

பயங்கரவாதத்தைப் பார்த்து இந்தியா ஒரு போதும் அமைதியாக இருக்காது. நமது அண்டை நாடுகளான பங்களாதேஷ், சீனா போன்றவை தீவிரவாதத்துக்கு எதிராகப் போராடுகின்றன. இந்தியாவில் உள்ள முப்படைகளையும் கண்காணிக்கும் ஒரே தளபதி விரைவில் நியமிக்கப்படுவார். இது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்தியாவைத் தனித் தனியாக நினைக்க முடியாது. எனவே நாட்டின் மூன்று பாதுகாப்பு வடிவங்களும் ஒன்றிணைய வேண்டும்.

வரும் காந்தி ஜயந்தி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்படவுள்ளன. பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும். நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும். ரசாயனப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். விண்வெளித் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றங்களைச் செய்துள்ளோம். நமது சந்திரயான் -2 இன்று நிலவை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருகிறது. ஜெய்ஹிந்த் எனப் பேசி முடித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு நீக்க முடிவெடுத்திருப்பது ஜம்மு மக்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகம் என விமர்சித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா.

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேற்று இரவு முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்களான மெகபூபா முஃப்தி, சஜத் லோன், உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுச்சிறையிலிருந்து தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பதிவில், “ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது மாநில உரிமையின் மீதான அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இதனால் மிகவும் அபாயகரமான விளைவுகள் ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியல் சாசன விதியை மீறி ஜம்மு காஷ்மீரின் ஒப்புதல் இன்றி இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டும் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏமாற்றுத்தனமான வேலை என்றும் துரோகம் என்றும் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

“எங்களிடம் பொய் சொல்லி எங்களை வீட்டுச் சிறையில் அடைத்துவிட்டு இந்த துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு எதிராக எதுவும் திட்டமிடப்படவில்லை எனக் கூறிவிட்டு காஷ்மீரின் ஜனநாயகக் குரலை முடக்கி லட்சக்கணக்கான ஆயுதம் தாங்கிய வீரர்களை மாநிலம் முழுவதும் நிறைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம்” என்றும் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், மக்களின் விருப்பப்படி காஷ்மீர் நலன் குறித்து மத்திய அரசு சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளது. இதன்படி மாநில அந்தஸ்தை இழப்பதுடன் சட்டசபையுடன் கூடிய ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன .

தற்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பு மூலம் மற்ற மாநிலங்களுக்கான சட்டம் காஷ்மீருக்கு பொருந்தும்.

பெங்களூரு

கண் தெரியாதவர்களுக்கான கார் அணிவகுப்பு பெங்களூருவில் வேகா சிட்டி மால்-இல் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

BTM தொகுதி எம்.எல்.ஏ  இராமலிங்க ரெட்டி தலைமை தாங்கினார். சமதா கட்சியின் தமிழ்நாடு மாநில முதன்மை பொதுச்செயலாளர் வினோத் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜெயநகர் தொகுதி எம்.எல்.ஏ சவும்யா ரெட்டி பரிசுகளை வழங்கினார்.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார்.

இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.  இதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் காஷ்மீர் நிலவரம் குறித்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பெங்களூரு

புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி மசோதாவையும் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 14 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் 2023 மே 15ம் தேதி வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பா.ஜ.க. அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில்  சபாநாயகர் 14 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் 23ஆம் தேதி மாலை குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் 99 வாக்குகள் பெற்று காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  பா.ஜ.கவிற்கு ஆதரவாக 105 பேர் வாக்களித்தனர்.  இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளதாவது:

பா.ஜ.க விற்கு எதிராக நாங்கள் ஒன்றாக சட்டமன்றத்தில் குரல் கொடுப்போம். தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவோமா என்பது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அதை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதைக்கு என்னால் இது குறித்து எதுவும் கூற இயலாது.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து மக்கள் மத்தியில் இந்த பிரச்சனையை கொண்டு போய் சேர்ப்போம்.  கடந்தமுறை இதை நாங்கள் செய்யத் தவறிவிட்டோம்.  ஏனென்றால் எங்களின் முன்பு பல்வேறு வேலைகள் நிலுவையில் இருந்தன.  குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல்.  நாங்கள் இங்கு நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவு வெற்றியை கைப்பற்றவில்லை என்றாலும் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் மிகவும் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறோம்.  நாங்கள் மக்கள் மத்தியில் சென்று பா.ஜ.கவின் ஜனநாயகத்திற்கு எதிரான முறைகள் குறித்தும் அதன் பாசிச சிந்தனைகள் குறித்தும் உரையாடுவோம். அரசியல் ரீதியாக நாங்கள் நிச்சயமாக பா.ஜ.கவை எதிர்த்து குரல் கொடுப்போம்.  நாங்கள் ஒருங்கிணைந்த நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.  பா.ஜ.கவை விட எங்களிடம் தலைசிறந்த தலைவர்கள் உள்ளனர். புதிய சிந்தனைகளையும், புதிய தலைவர்களையும் நாங்கள் என்றுமே வரவேற்கின்றோம்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் குறித்து கூறுவதற்கு ஒன்றும் கிடையாது.  தற்போதைக்கு அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை.  சில நாட்களுக்கு முன்பு அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான முயற்சியிகளை மேற்கொண்டோம் . ஆனால் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை, இனி எங்களுக்கு அது குறித்து எந்த கவலையும் இல்லை.

பா.ஜ.க எம்.எல்.ஏக்களை வாங்குவதற்காக ஒரு இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது.  எம்.எல்.ஏக்களை மிரட்டுகிறார்கள். பயமுறுத்துகிறார்கள். சில நேரங்களில் 30 முதல் 50 கோடி வரை பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்குகிறார்கள். அமலாக்கத்துறை மற்றும் இதர மத்திய துறைகளை பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்துகிறார்கள். ஜனநாயகத்துக்கு முற்றிலும் மாறாக செயல்படும் பா.ஜ.கவை போன்று நாங்கள் வேறு எந்த ஒரு கட்சியையும் பார்த்ததில்லை. இப்படி ஆக மோசமாக எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கும் அளவிற்கான ஒரு கட்சியை நாங்கள் தற்போது தான் பார்க்கிறோம். ஒரு வருடமாக ஆயிரம் கோடிக்கு மேலாக செலவு செய்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள் பா.ஜ.கவினர்.  குறிப்பிட்டு சொல்ல போனால் தனி விமானங்கள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் என்று இதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவழித்து இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
 
 
 
 
 

புதுடெல்லி

2019 மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார்  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பின்னர் அவர் கூறியதாவது:

2019-2020 நிதியாண்டில், ராணுவ துறைக்கு பட்ஜெட்டில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 931 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ஓய்வூதியம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 79 கோடி சேர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டு ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 6.87 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதன செலவினத்துக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 248 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம், ராணுவ ஸ்தாபனங்கள் பராமரிப்பு போன்ற வருவாய் செலவினத்துக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறைக்கு ரூ.62 ஆயிரத்து 659 கோடியே 12 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 18 சதவீதம் அதிகம் ஆகும்.

10 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ வசதி அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்துக்கு மட்டும் ரூ.6 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய பட்ஜெட்டை விட ரூ.5 ஆயிரத்து 858 கோடி அதிகம் ஆகும்.

இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா மற்றும் இதர சர்வதேச எல்லைகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்த ரூ.2 ஆயிரத்து 129 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 
 
டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது எனவும், இதனால் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிர்ச்சி செய்தியை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
 
மேலும், 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 40 சதவீத பேருக்கு குடிநீர் வசதி இருக்காது எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள 3 ஆறுகள், 4 நீர் நிலைகள், 5 சதுப்பு நிலங்கள், 6 காடுகள் ஆகியவை முற்றிலும் வறண்டு விட்டதாகவும் நிதி ஆயோக்  தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல் சென்னையை விட மற்ற மெட்ரோ நகரங்களில் நீர் ஆதாரங்களும், மழைப்பொழிவும் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
 
இதுதொடர்பாக தேசிய தண்ணீர் அகாடமியின்  முன்னாள் இயக்குனர் மனோகர் குஷலானி கூறியதாவது:
 
சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அரசு நம்பியுள்ளது. ஆனால் பூமி என்பது வரையறுக்கப்பட்ட கிரகம் என்பதும், இங்கு கடல்நீரும் ஒரு நாள் வறண்டு போகும் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். நம் குழந்தைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கு நாம் என்ன விட்டு செல்கிறோம்?. நம்மிடத்தில் நிறைய பணம் உள்ளது, ஆனால் நம் குழந்தைகளிடம் தண்ணீருக்கு பதிலாக பணத்தை குடிக்க சொல்ல முடியாது. நீரை சேமிப்பதற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒரு தீர்வாகாது. நீரை சேமித்தல் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் ஆகியவை அரசு மற்றும் மக்களுக்கு உள்ள கூட்டு பொறுப்பு என்று கூறினார்.
புதுடெல்லி
 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின், ஜோர்காட் நகரில் விமானப்படை தளம் இயங்கி வருகிறது. இங்கிருந்து நேற்று நண்பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் ஒன்று அண்டை மாநிலமான அருணாசல பிரதேசத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது.
 
விமானப்படையில் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானத்தில் விமானப்படை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் அமைந்துள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால் விமானப்படை அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
 
இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்காக சுகோய் போர் விமானம் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மேலும் ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினரும் விமானத்தின் பாதையில் தேடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
விமானப்படை விமானம் மாயமான விவகாரம் குறித்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்குக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விமானப்படை துணை தளபதி ராகேஷ் சிங் பதாரியாவிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாயமான விமானத்தை தேடும் பணிகளை முடுக்கிவிட்ட  அவர், அதில் இருந்த பயணிகளின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டார். இந்த நிலையில், விமானம் எங்கு உள்ளது? அதன் நிலை என்ன? என்பது பற்றி இன்று கண்டறிய முடியாததால், தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 
ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டதாகும். விமானப்படை வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த விமானம் கடந்த 40 ஆண்டுகளாக பணியில் இருந்தது. விபத்தில் சிக்கியுள்ள இந்த விமானம் மற்றும் அதில் இருந்தவர்களின் கதி குறித்து தெரியவில்லை. இதனால் விமானப்படையினர் மத்தியில் பெரும் சோகம் நிலவியுள்ளது.
 
 
Page 1 of 2