இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டெடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தமிழக அரசு எவ்வித விபரங்களையும் அளிக்கவில்லை என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறுவது தவறானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்கள் 2 விசைப்படகில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 11.10.2021 அன்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களை இலங்கை கடற்படை 13.10.2021 அன்று இரவு 8 மணியளவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் 14.10.2021 அன்று தேதியிட்ட கடிதம் வாயிலாக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை இணை செயலாளரை கேட்டுக்கொண்டார்.
மேலும் இம்மீனவர்களை மீட்க மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு பாரத பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு 15.10.2021 அன்று நேர்முக கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
இலங்கைக்கான இந்திய தூதரிடமிருந்து கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் அடையாள அட்டை அனுப்புதல் குறித்து பெறப்பட்ட மின் அஞ்சலுக்கு 20.10.2021 அன்று மின் அஞ்சல் மூலமாக விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீன்பிடி விசைப்படகு 3 மீனவர்களுடன் இலங்கை கடற்படை படகு விரட்டிய போது மூழ்க நேர்ந்த நிகழ்வில் இறந்த 1 மீனவரின் உடலை உடனடியாக அனுப்பி வைக்கவும் சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களை விடுவித்திடவும் தமிழக முதல்வர் ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு 20.10.2021 அன்று நேர்முக கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
மேலும் நானும், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சருக்கு இப்பொருள் குறித்து 20.10.2021 அன்று நேர்முக கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தேன்.
மத்திய அரசிற்கு அனைத்து தகவல்களும் தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு எவ்வித விபரங்களையும் அளிக்கவில்லை என மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர்.எல்.முருகன் 03.11.2021 அன்று தெரிவித்ததாக சில ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியானது முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முதல்வரின் தலைமையிலான இவ்வரசு மீனவர்கள் மீது எப்போதுமே மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை மீட்டெடுக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.