சென்னை
தமிழக அரசின் நிறுவனமான ஆவினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு வகையிலும் விளம்பரம் செய்யப்படுகின்றன.
வழக்கமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்புகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை அமோக இருக்கும். இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவின் பொருட்கள் இதுவரை ரூ.83 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் தீபாவளி விற்பனை அமைந்துள்ளது.
இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத அளவில் 83கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டு 600 டன் ஆவின் நெய் விற்பனையாகியுள்ளது இந்த ஆண்டு 900 டன் நெய் விற்பனையாகி உள்ளது.ஆவின் இனிப்பு வகைகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 270 டன் விற்பனை ஆகியுள்ளது.
இந்த ஆண்டு 400 டன் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு 55 கோடியாக இருந்த ஆவின் விற்பனை, இந்த ஆண்டு 83 கோடிக்கு விற்பனையாகிள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை 330 கோடி அளிக்கப்பட்டுள்ளது.அரசு துறைகளை சார்ந்த அனைவரும் ஆவின் இனிப்புகளை வாங்கி உள்ளனர்.
7 லட்சத்து 60 ஆயிரம் வீடுகளுக்கு தினமும் ஆவின் பால் செல்வதால் , பால் கவர்களில் ஆவின் இனிப்புகள் விளம்பரம் செய்யப்பட்டதால், ஆவின் பொருட்கள் ஒரே நேரத்தில் 27,60,000 பேருக்கும் நேரடியாக விளம்பரம் சென்றடைந்துள்ளது.. அடுத்தவாரம் சிங்கப்பூருக்கு ஆவின் பொருட்களை அளிக்க உள்ளோம்.. மிக விரைவில் அண்டை மாநிலம் மற்றும் அண்டை நாடுகளுக்கும் ஆவின் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம். இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.