பல்லடம் மாதப்பூரில் நடக்கும் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து மாதப்பூரில் நடக்கும் பொது கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார். பின்னர் மோடியும் அண்ணாமலையும் இணைந்து வாகனத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்கள். மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். குறிப்பாக திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேச இருக்கிறாராம்
பின்னர் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்கிறார். மதுரையில் தனியார் பள்ளியில் நடைபெற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அவர் இரவு மதுரையில் தனியார் விடுதியில் தங்குகிறார்.
நாளை ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பிரதமர் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 11:15 முதல் 12.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் உள்ள மைதானம் முழுவதும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால் பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.