ஜெருசலேம்
இஸ்ரேலின் போர் நடவடிக்கையால் பட்டினியில் தவிக்கும் காசா மக்களுக்காக அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை வீசியபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. காசாவில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. காசாவுக்கு விமானம் மூலம் எகிப்து மற்றும் அமெரிக்கா நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், காசா மக்களுக்கு அமெரிக்க அரசு வான் வழியாக உணவுப் பொட்டலங்களை அளித்தபோது, பாராசூட் விரியாமல் பழுதாகி மக்கள் கூடியிருந்த பகுதிக்குள் விழுந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து காசா நிர்வாகம் கூறியிருப்பதாவது: பாரசூட் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீசுவது பயன் அற்றது. நில எல்லை வழியாக நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு காசா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. முன்கூட்டியே எச்சரித்தும் அமெரிக்க அரசு அலட்சியமாக உள்ளதாக காசாவின் செய்தி தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.