கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராகக் களமிறங்கிய வீரப்பன் மகள் வித்யா ராணி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முன்னதாக, மேட்டூர் மூலக்காட்டில் இருக்கின்ற வீரப்பன் நினைவிடத்துக்குச் சென்று வேட்பு மனுவை வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அப்போது, ‘‘மொழி காக்க, இனம் காக்க, மண் காக்க, மானம் காக்க… இன்னுயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் வீர வணக்கம்’’ என்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உறுதி மொழியும் எடுத்துக்கொண்டார். அதன் பிறகு, வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக கிருஷ்ணகிரியில் இருக்கின்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இருந்து புடைசூழ புறப்பட்டுச் சென்றார் வித்யா ராணி.
இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் அணிவகுத்துச் செல்ல காரின் ‘சன் ரூஃப்’ வழியாக நின்றபடி கையெடுத்து கும்பிட்டபடியே பயணித்தார் வித்யா ராணி. காரின் இருபக்கமும் பௌன்சர்கள் தொங்கிக்கொண்டு வந்தனர். முன்பக்கம் வீரப்பன் பேனர் கட்டப்பட்டிருந்தது. மாமன்னன் அருண்மொழிச் சோழன் வேடம், திருவள்ளுவர் வேடம், அம்பேத்கர் வேடம் அணிந்தபடியும், வழிநெடுக பட்டாசு வெடித்தும், மேளத்தாளம் அடித்தும் நாம் தமிழர் கட்சியினர் அமர்க்களப்படுத்தி வித்யா ராணியை அழைத்து வந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்தபோதும், தனது தந்தை வீரப்பன் மீது சபதம் எடுத்துக்கொண்டார் வித்யா ராணி.