Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தனிநபர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியுறவுத் துறை கொடுத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின்...

தனிநபர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியுறவுத் துறை கொடுத்தது எப்படி? – முதல்வர் ஸ்டாலின் கேள்வி

வேலூர்

கச்சத்தீவை மீட்க வேண்டுமானால் இலங்கையுடன் போரிட வேண்டும் என 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் தெரிவித்தது என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி விமர்சித்தார். மேலும் நாட்டின் பாதுகாப்புத் துறை ஆவணங்களை அண்ணாமலை என்ற தனிநபருக்கு வெளியுறவுத் துறை எப்படி கொடுத்தது எனவும் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலூரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கச்சத்தீவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததைப் பற்றி இப்போது பா.ஜ.க. பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், இது அவர்களுக்கு எதிராகவே திரும்பிவிட்டது. தேன்கூட்டில் கையை வைத்தது போல, இப்போது பா.ஜ.க. மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் சொன்னது என்ன?: 2014-இல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் என்ன கூறியது? “கச்சத்தீவு மீண்டும் வேண்டும் என்றால் இலங்கை அரசுடன் போரில்தான் ஈடுபட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் கூறியது. இந்தப் பத்தாண்டு காலத்தில் பிரதமர் மோடி, எத்தனை முறை இலங்கைக்குப் பயணம் செய்தார். அப்போதெல்லாம் ஒருமுறையாவது கச்சத்தீவை மீண்டும் கேட்டிருக்கிறாரா? இலங்கை அதிபரைச் சந்தித்தபோதெல்லாம் கச்சத்தீவு இந்தியாவிற்குதான் சொந்தம் என்று சொல்லியிருக்கிறாரா? அப்போதெல்லாம் கச்சத்தீவு மோடியின் ஞாபகத்திற்கு வரவில்லை. நேரு காலத்தில் நடந்தது – இந்திரா காலத்தில் நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்கும் மோடிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி ஞாபகம் இருக்கிறதா? நேரு ஸ்டேடியம் ஞாபகம் இருக்கா?: மாண்புமிகு மோடி அவர்களே… கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் நாள் சென்னைக்கு வந்து, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்கள். அந்த நிகழ்ச்சியில், ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைத் தர வேண்டும். நீட் விலக்கு அளிக்க வேண்டும் என்று சில கோரிக்கைகளை வைத்தேன்… அந்தக் கோரிக்கைகளில் முதல் கோரிக்கையாக நான் வைத்ததே, “கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்… மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்றுதான் கோரிக்கை வைத்தேன். ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கோரிக்கை மனுவையாவது இதுவரை படித்துப் பார்த்தீர்களா? எத்தனை கதைகள், எத்தனை நாடகங்கள்.

முதலில், RTI விண்ணப்பம் செய்த 4 வேலை நாட்களில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் பற்றி எப்படி தகவல் கொடுத்தார்கள்? இரண்டாவது, இப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் திரு. ஜெய்சங்கர் அவர்கள், “2015-இல் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தபோது கொடுத்த தகவலில், கச்சத்தீவு இந்தியாவின் பகுதியாக எப்போதும் இருந்ததில்லை” என்று, பா.ஜ.க. அரசு தகவல் கொடுத்திருக்கிறது. இப்போது தேர்தல் வருகிறது என்று தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி தகவலை மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த அந்தர் பல்டி ஏன்? மூன்றாவது, கடந்த பல ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதெல்லாம், அதற்கு உரிய பதிலைச் சொல்லவில்லை. எத்தனையோ பேர் R.T.I. விண்ணப்பம் செய்தபோதும் தெளிவான தகவல்களைக் கொடுக்கவில்லை.

உச்சநீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்று பதில் சொல்லாமல் இருந்த பா.ஜ.க. அரசு – இப்போது R.T.I. மூலம் எப்படி தவறான தகவலைக் கொடுத்தார்கள்? பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு தனிநபருக்கு எப்படி, வெளியுறவுத் துறை நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்திருக்கிறார்கள்? நான்காவது, கச்சத்தீவிற்காக இப்போது திடீர் கண்ணீர் வடிக்கும் பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு என்று நடந்ததே? ஒரு கண்டிப்பாவது இலங்கைக்குச் செய்தாரா? ஏன் செய்யவில்லை? இப்போது, சீனா பற்றியாவது வாய்திறந்தாரா? அருணாசலப் பிரதேசத்தின் பல பகுதிகளுக்குச் சீனா சொந்தம் கொண்டாடுகிறதே? 30-க்கும் மேற்பட்ட நம்முடைய இடங்களுக்குச் சீனமொழியில் பெயர்களை வெளியிட்டிருக்கிறதே? அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இலங்கையைக் கண்டிக்கவும் துணிச்சல் இல்லை, சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் கச்சத்தீவைப் பற்றிப் பேசலாமா? இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments