Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாஅனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார் – நீதிமன்றத்தில் எக்கோ...

அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார் – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவு பிறப்பித்தார். மேலும் இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019ம் ஆண்டு உத்தரவிட்டார்.

நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனிடையே படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல்
செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண் ஆஜராகி, இந்திய திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையைத் தவிர அனைத்து உரிமைகளையும் இழந்து விட்டதாக தெரிவித்தார்.

எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும். ஸ்பாட்டிஃபை மூலம் இளையராஜா பெற்ற வருமானத்தை தனி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.  அல்லது குறைந்தபட்சம் இந்த வருமானத்திற்கான கணக்குகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்,
இசையமைப்பாளருக்கு அவ்வாறு உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். அப்போது
குறுக்கிட்ட இசை நிறுவனங்கள் தரப்பு வழக்கறிஞர், இளையராஜா எல்லோருக்கும்
மேலானவர் என்று தன்னை நினைப்பதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஆம். நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும், வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாமெனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்கு நீதிபதிகள்
ஒத்திவைத்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments