புதுடில்லி
உங்கள் ஐபோன் உளவு பார்க்கும் மென்பொருளால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று ஆப்பிள் நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்கள் பலருக்கு மீண்டும் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. இது என்எஸ்ஓ குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானதாக இருக்கும் என்றும் அந்த எச்சரிக்கையில் கூறியுள்ளது.
இது தொடர்பாக, அந்த நிறுவனம் அனுப்பிய இமெயிலில் கூறப்பட்டு உள்ளதாவது: உங்கள் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய ஐபோனை தொலைதூரத்தில் இருந்தே ஊடுருவ முயற்சிக்கும் கூலிப்படையின் ஸ்பைவேர் தாக்குதலால் நீங்கள் குறிவைக்கப்படுவதை ஆப்பிள் கண்டறிந்துள்ளது. நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் காரணமாக இந்த தாக்குதல் குறிப்பாக உங்களை குறிவைத்திருக்கலாம் என்று அந்த இமெயிலில் கூறப்பட்டுள்ளது.
கடந்தாண்டு அக்டோபரில் அரசியல் தலைவர்கள் பலருக்கும் இதேபோன்று எச்சரிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக இந்த எச்சரிக்கை செய்தியை ஆப்பிள் நிறுவனம் அனுப்பி உள்ளது. யார் ஊடுருவ முயன்றனர் என்ற தகவலை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை.
கடந்த 2021ம் ஆண்டில் இருந்து இதுவரை 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்த நிறுவனம் இதுபோன்ற எச்சரிக்கை இமெயிலை அனுப்பி உள்ளது.