எம்.எஸ்.சி.ஏரீஸ் என பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் பாகிஸ்தான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணித்துள்ளனர்.
இந்த 25 மாலுமிகளில் 17 மாலுமிகள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. போர்ச்சுகீசிய கொடியுடன் பயணித்த எம்.எஸ்.சி.ஏரீஸ் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் சிறை பிடித்தனர்.
ஈரான் புரட்சி படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்த கப்பல் இஸ்ரேலுக்கு சொந்தமானது என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உசைன் அமீர்-அப்துல்லாஹியான் இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரிடம் பேசிய ஜெய்சங்கர், “இந்த நிலை கவலையளிப்பதாக உள்ளது. இந்திய மாலுமிகளை சந்திப்பதற்கு அனுமதி வேண்டும். அதற்கு ஈரான் அரசு உதவி செய்ய வேண்டும்.” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய உசைன் அமீர்-அப்துல்லாஹியான், “மாலுமிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஈரான் செய்து தரும்.” எனக் கூறியுள்ளார்.