தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் ராஜகிரியில், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலகல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம் வட்டம் ராஜகிரியைச் சேர்ந்த தர்மராஜ், தனது வயலில் கல்வெட்டு கிடப்பதாக அளித்த தகவலின்பேரில், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் அங்கு சென்று கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது: முதலாம் ஆதித்த சோழனின் பட்டப் பெயர் இராசகேசரி. இவரது பெயராலேயே இந்த ஊர் இராச கேசரி சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர், காலப் போக்கில் பெயர் மருவி, தற்போது இராசகிரி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
காவிரியின் தென்கரை தலங்களான கோவில்தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோயில், திருப்பாலைத்துறை பாலைவன நாதர் கோயில், நல்லூர் கோயில் ஆகியவை இராசகேசரி சதுர்வேதி மங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டே இயங்கி வந்துள்ளன.
தற்போது இங்கு கண்டெடுக்கப்பட்ட 4 துண்டு கல்வெட்டுகள், 1,000 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால எழுத்தமைதியுடன் காணப்படுகின்றன. 4 துண்டு கல்வெட்டுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு அற்றவையாக இருப்பதுடன், முழுமையாகவும் இல்லை. இராசேந்திர சோழன், விண்ணகரம் என்ற கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைப் பற்றியதாக இக்கல்வெட்டு இருக்கலாம் என அறியமுடிகிறது.
அதில் உள்ள வாசகங்களில் மங்கலம், பிறவி கலாஞ்சேரி, கலாகரச்சேரி போன்ற இடங்களின் பெயர்களும், நக்கன் நித்தவிநோதகன், கண்டன், மும்முடிச் சோழ சோழவரையன் போன்ற பெயர்களும், மணல் பெறும்வதி, ஆதித்தவதி, கண்டன் வாய்க்கால் என்ற வாய்க்கால்களின் பெயர்களும், நில எல்லை, மா, குழி, விலை ஆவணம் போன்ற நில அளவு குறித்த சொற்களும் காணப்படுகின்றன.
சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் போன்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்தவதி, கண்டன் வாய்க்கால் போன்ற நீர்நிலைகளின் பெயர்களும், கலாகரச்சேரி என்ற வாழ்விடப் பகுதியும் குறிக்கப் பெற்றுள்ளன என்றனர்.