கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான் என கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணி வேட்பாளரகளை ஆதரித்து ராகுல் காந்தி , மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று கேரளாவில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் பரப்புரை மேற்கொள்கின்றனர். தனது சொந்த தொகுதியான வயநாட்டில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். அதேபோல திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தென் மாவட்டஙகளைச் சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரகளை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது..
“பாஜகவின் தேர்தல் அறிக்கை இந்த நாட்டின் வளர்ச்சியைப் பற்றியது. நாட்டில் 3 கோடி பெண்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன, அதில் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் வீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கேரளாவில் 73 லட்சம் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
வட மற்றும் மேற்கு இந்தியாவில் தென்னிந்தியாவில் உள்ளதுபோல புதிய புல்லட் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். புதிய தலைமுறையைச் சார்ந்த மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த தேசம் எப்படி வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கேரள மக்கள் பார்த்துள்ளனர்.
“கடந்த 10 ஆண்டுகளில் நாம் பார்த்தது வெறும் ட்ரெய்லர்தான். வரும் ஆண்டுகளில் உண்மையான படத்தை பார்க்கப் போகிறீர்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.