மதுரை
“நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் பல பரிசோதனைகள் செய்கின்றனர். அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், லேப் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகள் செய்வதை மருத்துவர்கள் தவிர்க்கலாம்” என்று பத்மஸ்ரீ விருது பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கோவிந்தப்ப நாச்சியார் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும், பிரபல கண் மருத்துவருமான டாக்டர் கோவிந்தப்ப நாச்சியாருக்கு, அவரது மருத்துவ சேவையை பாராட்டி, கடந்த 9-ம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பத்மஸ்ரீ விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தார். விருது பெற்று மதுரை திரும்பிய அவிந்த் கண் மருத்துவமனை இயக்குநர் கோவிந்தப்ப நாச்சியார் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
பத்மஸ்ரீ விருது பெற்றது மிக பெருமையாக உள்ளது. இந்த விருது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு, சேவைக்காக கிடைக்கவில்லை. அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுடைய பிரதிநிதியாகதான் இந்த விருதை பெற்றதாக கருதுகிறேன்.