தெஹ்ரான்
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் மற்றும் மூத்த அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணித்தனர். ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தின் ஜோல்பா நகர் அருகே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென மாயமானது. இதையடுத்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் ஈரான் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மலைப்பகுதி என்பதாலும் அதிக பனிமூட்டமாக இருந்ததாலும் தேடுதல் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மாயமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரிகள் ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில் ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அதிபர் இப்ராகிம் ரைசியுடன் ஹெலிகாப்டரில் பயணித்த வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்தனர்.