டெஹ்ரான்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 28ல் நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபராக, 2021ல் பதவியேற்றவர் இப்ராஹிம் ரைசி, 63. இவர் நேற்று முன்தினம் ஈரான் – அஜர்பைஜான் எல்லையில் கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக, ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். மலைகள் நிறைந்த பகுதியில் சென்றபோது, மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முழுதும் எரிந்தது.
இதில், அதிபர் இப்ராஹிம் ரைசி உட்பட அதில் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமிர் அப்தொலஹின் உள்ளிட்டோரும் உயிரிழந்தனர். அதிபர் மறைவையடுத்து, ஈரான் அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல் துணை அதிபரான முகமது மோஹ்பைர், இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 28ல் நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.