சென்னை
போக்குவரத்து துறை – போலீஸ் துறை இடையே கடந்த 3 நாட்களாக நீடித்து வந்த மோதல் தமிழக உள்துறை செயலாளர் அமுதா – போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டி இடையே நடந்த ஆலோசனையைத் தொடர்ந்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
திருநெல்வேலி – துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, ‘வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்’ என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை, வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும் என அறிவுறுத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தது.
இதனால் கடுப்பான போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், அரசு பஸ்களை தவறான முறையில் இயக்கினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதி மீறிய அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இது குறித்த செய்தி தினமும் நாளிதழ்களிலும், டிவிக்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது.
கடந்த 3 நாட்களாக பிரச்னை நீடித்த நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தது. இது பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசுத்துறைகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் எங்கு போய் முடியுமோ என கவலை தெரிவித்த அவர்கள் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியதுடன்? உடனடியாக இதில் தலையிட்டு பிரச்னைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனையடுத்து பிரச்னைக்கு முடிவு காண உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதில் பிரச்னைக்கு தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. விரைவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவுரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.