கர்நாடகாவில் ஆபாச வீடியோ மற்றும் பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா வாக்குப்பதிவு முடிந்ததும் வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இவர் ஹாசன் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கிடைத்த தகவலின் படி, ஜெர்மனியில் இருப்பதாக தெரியவந்தது. இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. இதன்மூலம் வழக்குப்பதிவு, சம்மன், விசாரணை என அதிரடி காட்டப்பட்டது. ஆனால் ஜெர்மனியில் இருந்த பிரஜ்வால் தரப்பில் இருந்து அவகாசம் கோரப்பட்டது.
மேலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், பிரஜ்வாலின் தாத்தாவுமான ஹெச்.டி.தேவகவுடா உடனடியாக இந்தியா திரும்பி விசாரணையை சந்திக்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தார்.
இதையடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட பிரஜ்வால் ரேவண்ணா, வரும் 31ஆம் தேதி பெங்களூரு திரும்பவுள்ளதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய பயணத் திட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. தான் புறப்படும் போது எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை. இருப்பினும் தன் குடும்பத்தினரிடமும், தாத்தாவிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்ட குற்றமற்றவன் என்று நிரூபிப்பேன். அரசியலில் வேகமாக வளர்ந்து வருவதால் தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் பெங்களூரு சிட்டியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் முன்னேற்பாடுகள் தயாராகின. தடுப்புகள் போடப்பட்டன. இந்த சூழலில் நள்ளிரவில் பிரஜ்வால் ரேவண்ணா விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தார். அவர் வெளியே வந்ததும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து, பின்னர் சிறப்பு விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவார். அதில் சிறப்பு விசாரணைக் குழு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் எனத் தெரிகிறது.