ஒடிசாவை ஒரு தமிழன் ஆளலாமா? என்று பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பற்ற வைத்த நெருப்பு, தேசிய அளவில் பேசுபொருளானது. அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமான ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து, பின்னர் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.
குறிப்பாக நவீன் பட்நாயக் எங்கு சென்றாலும் உடன் செல்கிறார். ஒடிசா அரசில் IT என்ற துறையை உருவாக்கி அதன் தலைவராக நியமிக்கப்பட்டு, அமைச்சரவை அந்தஸ்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் வி.கே.பாண்டியன். அம்மாநில மக்கள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறார். இத்தகைய சூழலில் பிஜு ஜனதா தளம் மற்றும் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் தானா? என்று கேள்வி பலருக்கும் எழுந்தது. இத்தகைய சூழலில் நவீன் பட்நாயக் பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. விவாதப் பொருளாகவும் மாறியிருக்கிறது. அதாவது, என்னுடைய அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் கிடையாது. எனது அரசியல் வாரிசு யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
என்னுடைய முடிவுகள் அனைத்தையும் அவர் எடுக்கிறார் என்பது முற்றிலும் வதந்தி. இதற்கு ஏற்கனவே பலமுறை பதிலளித்துள்ளேன். இதில் சிறிதும் உண்மையில்லை. இப்படி பேசுவது துரதிஷ்டவசமானது. ஏன் இப்படி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை. ஒடிசாவில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து கொண்டே செல்வதால், அவர்கள் தான் இப்படிப்பட்ட வதந்தியை கிளப்பி விட்டிருக்கக் கூடும். இங்கு மட்டுமல்ல. நாடு முழுவதும் பாஜகவின் செல்வாக்கு குறைந்து கொண்டு தான் வருகிறது. எங்கள் கட்சி மக்களுக்காக எப்படி செயல்படுகிறது? என்னென்ன செய்கிறது? என்று பாருங்கள். மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நவீன் பட்நாயக் தெரிவித்தார்.