பெங்களூரு
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து 400 இடங்களைக் கைப்பற்றும் எனவும், பாஜக மட்டும் சுமார் 330 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தேர்தலுக்கு முன்னரும் பின்னரும் பெரிய மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்ததால், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் எனவும், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியை மறைமுகமாக சாடியுள்ளார். அந்த பதிவில், “சக்ரவர்த்தி நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது தனித்து நடக்க முடியாது. அவருக்கு யாராவது உதவி செய்தால் மட்டுமே நடக்க முடியும். I.N.D.I.A கூட்டணிக்கும் அவர்களுக்கு வாக்களித்த பொறுப்பான நாட்டு மக்களுக்கும் நன்றி. அவரது (பிரதமர் மோடி) ஈகோவை உடைத்து, அவரது இடத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதற்காக நன்றிகள். இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் போராடுவோம், இந்தியாவுக்காக நாங்கள் எப்போதும் உடனிருப்போம்” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.