குவைத் தீ விபத்தில் 43 இந்தியர்கள் பலியாகி இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் பலியான தமிழர்கள், படுகாயம் அடைந்த தமிழர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.
தெற்கு குவைத்தின் மங்கஃப் நகரில் 6 மாடி அடுக்கு மாடிக் கட்டிடத்தில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இக்கட்டிடத்தின் கீழ் தளத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவுதான் தீ விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. கீழ் தளத்தில் பற்றிய தீ 6 மாடி கட்டிடம் முழுவதும் பரவியது.
இக்கட்டிடத்தில் 150-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியதால் தீயில் கருகியும் கரும்புகையில் சிக்கி மூச்சு திணறியும் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
குவைத் தீ விபத்தில் தற்போதுவரை மொத்தம் 43 இந்தியர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த 24 பேரில் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குவைத் தீ விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை 5 தமிழர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.