Tuesday, January 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஒன்லைன் நியூஸ்கள்ளக்குறிச்சி சாராய பலி 57 ஆக உயர்வு - 157 பேருக்கு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி சாராய பலி 57 ஆக உயர்வு – 157 பேருக்கு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்த நிலையில் 4 மருத்துவமனைகளில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியாகும் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது. அதாவது கடந்த 18 ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். அன்று இரவு முதல் பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட தொடங்கியது.

இதையடுத்து 19ம் தேதி முதல் தொடர்ந்து பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. வாந்தி, மயக்கம், வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை அவர்கள் எதிர்கொண்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விசாரணையில் மெத்தனால் கலந்த சாராயத்தை அவர்கள் பருகியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பலரும் மேல்சிகிச்சைக்காக பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தான் தொடர்ந்து பலரும் பலியாகி வருகின்றனர். நேற்று இரவு வரை மொத்தம் 55 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மேலும் 159 பேருக்கு மருத்துவனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 107 பேர் உள்ளனர். இவர்களில் 10 பேர் அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 7 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர், விழுப்புரம் அரசு மருத்துவனையில் 4 பேர் என மொத்தம் 159 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தான் பலி எண்ணிக்கை உயருமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் கூட சிகிச்சையில் உள்ள அனைவரையும் எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சிகிச்சை வழங்கும் நடைமுறையை விரைவுப்படுத்தி வருகிறார். அதோடு கருணாபுரத்தில் வீடு வீடாக சென்று சுகாதாரத்துறையினர் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments