கொழும்பு
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க நிரோஷன் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் 2002-ம் ஆண்டு தம்மிக்க நிரோஷன் இடம் பெற்றிருந்தார். மேலும் 19 வயதுக்குட்பட்டோருக்காக இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் நிரோஷன். தற்போது 41 வயதாகும் தம்மிக்க நிரோஷன் இலங்கையின் அம்பலாங்கொடை என்ற பகுதியில் வசித்து வந்தார்.
அம்பலாங்கொடையில் தமது வீட்டு முன்பாக தனியாக தம்மிக்க நிரோஷன் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே தம்மிக்க நிரோஷன் உயிரிழந்தார்.
தம்மிக்க நிரோஷன் மீது எந்த ஒரு வழக்குகளும் இல்லை. இந்த நிலையில் நிரோஷன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பலாங்கொடை பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர்தான் துபாயில் இருந்து நிரோஷன் இலங்கை திரும்பியதாகவும் துபாயில் ஏதேனும் சிக்கலில் சிக்கி இருந்தாரா நிரோஷன் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கிரிக்கெட் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.