ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் தொகுதி எம்.பி.க்கள் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி சுயேச்சை வேட்பாளரான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து, தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுக்களில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.