Tuesday, January 21, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாநிவாரண பணி - வயநாடு சென்றடைந்தது தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு

நிவாரண பணி – வயநாடு சென்றடைந்தது தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

மக்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்கு கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டிருக்கின்றன. விவரமறிந்த மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் தற்போதுவரை 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை நேற்று 30-40 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால், இன்று காலை நிலவரப்படி சுமார் 151 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 3 கிராமங்களை சேர்ந்த 1000 பேர் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேபோல 100க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் மீட்பு பணிக்காக தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி சமீரன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை கேரளா சென்றடைந்தனர். அங்கிருந்து வயநாடு கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் குழுவினர், காலை 10 மணியளவில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தேவையான மீட்பு உபகரணங்கள் கோவையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. முன்னதாக வயநாடு நிவாரண பணிக்காக ரூ.5 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிட்டதக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments