டெல்லி
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வேறு நாடுகளில் தஞ்சமடைவதில் சிக்கல் எழுந்துள்ளது. பிரிட்டன் அவரை ஏற்க மறுத்த நிலையில் அமெரிக்கா, பின்லாந்து, சவூதி அரேபியாவில் அவர் தஞ்சம் கோர வாய்ப்புள்ளது. தற்போதைய சூழலில் அவருக்கு அடைக்கலம் கொடுக்க எந்த நாடுகளும் முன்வராத நிலையில் ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது தற்காலிகமாக அடைக்கலம் வந்துள்ள ஷேக் ஹசீனா இன்னும் எவ்வளவு நாள் நம் நாட்டில் தங்கியிருப்பார்? எனவும் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 5ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் மாணவர்கள் கொந்தளிப்பு மனநிலையில் இருந்தனர்.
இதனால் உயிருக்கு பயந்து ஷேக் ஹசீனா உடனடியாக அங்கிருந்து வெளியேறி நம் நாட்டில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளார். ஷேக் ஹசீனாவுடன் அவரது தங்கை ரெஹானாவும் நம் நாட்டில் தான் இருக்கிறார். இவர்கள் மத்திய அரசு பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டத்தால் ஷேக் ஹசீனா மீண்டும் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர் தனது சகோதரி ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் ஆளும் கட்சியின் தொழிலாளர் கட்சியின் எம்பியாக பிரிட்டனில் உள்ளார். இதனால் பிரிட்டனில் தஞ்சமடைய முடிவு செய்தார். மேலும் உறவினர் வசிக்கும் பின்லாந்து, மகன் சஜிப் வாஹித் ஜாய் வசிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைய திட்டமிட்டுள்ளார். மேலும் அவர் தஞ்சமடையும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவும் உள்ளது. இதில் ஷேக் ஹசீனாவுக்கு பிரிட்டன் தஞ்சமடைய வாய்ப்பு வழங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிற நாடுகளில் தஞ்சமடைய தேவையான நடவடிக்கைகளை ஷேக் ஹசீனா இன்னும் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதல் நாட்கள் நம் நாட்டில் அவர் தங்கியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. நம் நாடும் சில முக்கிய காரணங்களால் அவருக்கு நீண்டகாலமாக புகலிடம் வழங்க முடியாத நிலையில் உள்ளது. மாறாக நம்முடன் நட்பில் இருந்த ஷேக் ஹசீனாவை பாதுகாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனால் தான் உயிருக்கு பயந்து வந்த ஷேக் ஹசீனாவுக்கு உடனடியாக நம் நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது. விரைவில் அவருக்கு வேறு நாட்டில் தஞ்சமடைய அனுமதி கிடைக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உயர்மட்ட அளவில் விசாரித்தபோது, ‛‛ ஷேக் ஹசீனா பாதுகாப்பு தேடி பிற நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு இன்னும் வரவில்லை. நம் நாட்டை பொறுத்தவரை அகதிகள் மற்றும் அடைக்கலாம் கொடுப்பதற்கு என்று சட்டங்கள் எதுவும் இல்லை. பொதுவாக அகதி அல்லது அடைக்கலம் கொடுக்கும்போது அவர்கள் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்றங்களுக்கு செல்கிறார்கள். இதனால் சிக்கல்கள் ஏற்படும். இதன் காரணமாக பல நாடுகளில் சட்டங்கள் எதுவும் இல்லை.
அப்படித்தான் நம் நாடும். இதனால் யாரையும் நாம் அகதிகளாகவோ, அடைக்கலம் கொடுத்தோ வைக்க முடியாது. மாறாக அரசின் கொள்கை முடிவின் காரணமாக தலாய் லாமா இங்கே இருக்கிறார். நம் நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு சூழலை பொறுத்து பிற நாட்டு தலைவர்களை தங்க அனுமதிக்கிறோம். இருப்பினும் அதற்கு என்று தனியே சட்டம் இல்லை. மாறாக அது மத்திய அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. இதுதவிர அடைக்கலம் கொடுப்பது, அகதிகளுக்கு என்று தனி சட்டம் இயற்றும்போது ஈரான், ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தானில் இருந்து வந்து நம்மிடம் அடைக்கலம் கேட்கலாம். மேலும் நீதிமன்றங்களில் வழக்குகள் செல்பும்போது அதனை முடித்து வைக்க நீண்டகாலம் பிடிக்கும். இதனால் தற்போது பிரிட்டன் நாடும் புலம் பெயர்ந்தோருக்கான குடியுரிமை மற்றும் அடைக்கலம் கொடுப்பது தொடர்பான சட்டங்களால் ஏற்படும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு பிரிட்டனும் அந்த சட்டத்தை ரத்து செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறது. இதனால் ஷேக் ஹசீனா எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் நம் நாட்டில் தங்கி இருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர். மேலும் ஷேக் ஹசீனா மீண்டும் வங்கேதசம் செல்கிறாரா? என்பது பற்றிய கேள்வியும் பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஹித் ஜாய் கூறுகையில், ‛‛வங்கதேசத்தில் ஜனநாயகம் மீண்டும் நிலைநிறுத்தப்படும் போது என் தாய் அங்கு செல்வார். வங்கதேசத்தில் தற்போதைய பிரச்சனைக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தான் காரணம். அவர்கள் தான் பிரச்சனைக்கு தீயை மூட்டினர். எனது தாய்க்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்தியாவுக்கு நன்றி. பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசுக்கு நன்றி. வங்கதேசத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர இந்தியா உதவி செய்ய வேண்டும்” என்றார்.