கொல்கத்தா
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்த பின் FORDA டாக்டர்கள் சங்கம் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றது.
FORDA சங்க பிரதிநிதிகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை அவரது இல்லத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சந்தித்தனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், “நோயாளிகளின் நலன் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக FORDA சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஒரு குழுவை அமைக்க சுகாதார அமைச்சர் ஒப்புக்கொண்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மனிதகுலத்திற்கு சிறப்பாகச் சேவை செய்வதே எங்களின் இறுதி இலக்கு. மருத்துவர்கள் தங்களை பாதுகாப்பாக உணர்ந்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும். எனவே, வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
FORDA சங்கம் போராட்டத்தை வாபஸ் பெற்றாலும், மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவமனை மற்றும் அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (FAIMA) ஆகிய மருத்துவ சங்கங்கள், மருத்துவர்களின் மீதான தாக்குதலை தடுக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரை தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.