கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் சந்தீப் கோஷ் இன்று ( ஆக.,28) அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்டார். கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து, இந்த வழக்கை , சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, இங்கு பணியாற்றிய டீன் சந்தீப் கோஷூவிடம் சி.பி.ஐ., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் மீது மருத்துவக் கல்லுாரி தொடர்பான ஒப்பந்தங்களை வழங்க சம்பந்தப்பட்டவர்களிடம் 20 சதவீதம் லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சமீபத்தில் இவரது வீட்டில் சோதனை நடந்தது. தொடர்ந்து சி.பி.ஐ., உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தியது. இந்நிலையில் சந்தீப் கோஷை ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.