Monday, September 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமேற்கு வங்க பந்த்: பாஜக - திரிணமூல் தொண்டர்கள் மோதல் இயல்புநிலை பாதிப்பு

மேற்கு வங்க பந்த்: பாஜக – திரிணமூல் தொண்டர்கள் மோதல் இயல்புநிலை பாதிப்பு

கொல்கத்தா

பாஜக அழைப்பு விடுத்துள்ள 12 மணி நேர பந்த் காரணமாக மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாடியாவில் திரிணமூல் – பாஜக தொண்டர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. ஆங்காங்கே ரயில் மறியல், சாலை மறியல், கடைகளை மூட வற்புறுத்தல் என பாஜகவினர் பந்த்தை முழு வீச்சில் அமல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

பந்த் காரணமாக தலைநகர் கொல்கத்தாவில் வழக்கமான வார நாட்களை ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே பேருந்துகள், வாடகை வாகனங்கள் ஓடுகின்றன. இருப்பினும், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. மாநிலத் தலைநகரில் கடைகளை மூட வலியுறுத்திய பாஜக தொண்டர்கள் பலரையும் போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்குகின்றன. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தியுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக உள்ளது.

பங்காவோன் – சீல்டா இடையே ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள்ன. முர்ஷிதாபாத், பாரக்போரிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மாநில அரசின் வடக்கு பெங்கால் மாநில போக்குவரத்துக்கு கழகப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்குவதைக் காண முடிந்தது.

நந்திகிராமில் பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பங்குரா பேருந்து நிலையத்திலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு மேற்கு வங்க தலைமைச் செயலகம் நோக்கி நேற்று (செவ்வாய்க் கிழமை) ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்தனர். கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக மாறின. இதில் 100 மாணவர்களும், 15 போலீஸாரும் காயமடைந்தனர்.

இரு தரப்பு மோதல் காரணமாக, கொல்கத்தா, ஹவுரா பகுதிகள் வன்முறை களமாக காணப்பட்டன. போராட்டத்தை ஒருங்கிணைத்ததாக 220 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 28-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரத்துக்கு மேற்கு வங்கம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் சுகாந்த் மஜும்தார் நேற்று அறிவித்தார். அதன்படி இன்று (ஆக.28) காலை 6 மணிக்கு பந்த் தொடங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments