ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் பெரும் சேதத்தை சந்தித்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் தலா 2 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல் சில நாட்களுக்கு வெள்ள நீரை எதிர்த்து தாக்குப் பிடிக்கும் என்றாலும், நீடித்த வெள்ளம் பருத்தி, செம்பருத்தி மற்றும் சில பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இது இந்த மாநில விவசாயிகளின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்விரு மாநிலங்களிலும் விவசாயிகள் காரீஃப் அறுவடையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கு தற்போது ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் வெள்ளத்தால் 20 மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து மாவட்டங்களில் 1.69 லட்சம் ஹெக்டேர் பயிர்களும், 19,000 ஹெக்டேரில் காய்கறிகள், பழங்கள் போன்ற பயிர்களும் சேதமடைந்துள்ளன. இதற்கிடையில், சுமார் 2 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெலுங்கானா அரசு மதிப்பிட்டுள்ளது. பருத்தி மற்றும் செம்பருத்தியில் ஏற்பட்ட சேதம் சற்று அதிகமாக உள்ளது.
வேளாண் துறையினர் மழையினால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், வேளாண் துறை நிலைமையை கண்காணித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வெள்ள பாதிப்பால் பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். இதன் விளைவாக, சந்தையில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, பருத்தி உற்பத்தி குறைவால் துணி விலை உயரும். அரசு, உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மறுபுறம், தெலுங்கானா விவசாயிகள் சங்கம், உணவுப் பயிர்களில் ஏற்பட்ட இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடும், வணிகப் பயிர்களுக்கு ரூ.50,000 இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. “முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு அறிவித்தார். இழப்புகளை கருத்தில் கொண்டு அரசு இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி. ராம்பாபு கூறியுள்ளார்.