சென்னை
பிக்பாஸ் 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரொமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். பரவலான ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். வார இறுதி நாட்களில் புத்தகங்களை பரிந்துரைப்பது, முடிந்த அளவுக்கு இரு தரப்பு கருத்துகளையும் உள்வாங்கி பதில் சொல்வது, வித்தியாசமான ஆடைகள் மூலம் கவனம் ஈர்ப்பது, தனது சினிமா அனுபவங்களை பகிர்வது என தனது பாணியில் முத்திரை பதித்த கமல் 7 ஆண்டுகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இப்படியிருக்க, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி, சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக “பிக்பாஸ்” தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கூறி கமல்ஹாசன் தற்காலிகமாக விலகினார். அவரைத் தொடர்ந்து யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில், எதிர்வரும் பிக்பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ப்ரொமோ வீடியோவில், இருட்டில் நடந்து வரும் விஜய் சேதுபதி, கோட் சூட் உடனான அவர் மீது வெளிச்சம் பாய்கிறது. மேலும், இந்த சீசன் எப்போது தொடங்கும், இதன் போட்டியாளர்கள் யார் என்ற மற்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.