Tuesday, February 18, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

புதுடெல்லி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் காலமானார். 1952-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி. அவருக்கு வயது 72. ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் பணியாற்றியவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை இருந்தார் இவர். ஜே.என்.யூ.வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற சீதாராம் யெச்சூரி, அவசர நிலை பிரகடனத்தின்போது கைதானார். 1974ல் மாணவர் கூட்டமைப்பில் இணைந்த யெச்சூரி 1975ல் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.

மார்க்சிஸ்ட் கட்சியில் மத்தியக் குழு உறுப்பினர், பொலிட் ப்யூரோ என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1984-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்குவங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 2005-ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 2017 வரை எம்.பி.யாக தொடர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக 32 ஆண்டுகள் பதவி வகித்தவர் சீதாராம் யெச்சூரி ஆவார். 2015-ம் ஆண்டு முதல் மறையும் வரை தொடர்ந்து 3 முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் சீதாராம் யெச்சூரி. 2021ஆம் ஆண்டு சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஸ் யெச்சூரி (34) கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுவாசப் பிரச்சனை காரணமாக கடந்த மாதம் 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி இயற்கை எய்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments