ஹரியானா
அதானி துறைமுகத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற 5ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இறுதிக் கட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள பஹதுர்கர் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்த ராகுல் காந்தி, வாகனப் பேரணியில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, பஹதுர்கரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டியை அமல்படுத்தி வங்கிகளின் கதவுகளை மூடிவிட்டார் நரேந்திர மோடி. அவர் அதானி-அம்பானிக்கு மட்டுமே நன்மை செய்ய விரும்புகிறார். இன்று 2-3 கோடீஸ்வரர்களுக்கு உதவுவதற்காக அரசை நடத்துகிறது பாஜக என்பது நாடு முழுவதும் தெரியும். ஹரியாணாவில் இருந்து அதிகமானோர் ராணுவத்தில் சேருவார்கள். அக்னீவீர் திட்டத்தை அறிமுகம் செய்து அதனை முடக்கிவிட்டார் மோடி. அக்னிவீர் என்பது ராணுவ வீரர்களின் தியாகி அந்தஸ்தையும், ஓய்வூதியத்தையும் திருடும் திட்டமாக உள்ளது. அனைவருக்கும் போதைப் பொருள் பிரச்சினை இருப்பது தெரியும். நான் மோடியிடம் ஒன்று கேட்கிறேன். அதானியின் முத்ரா துறைமுகத்தில் கிலோ கணக்கில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?.
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ரூ. 1200-க்கு விற்கப்படும் எரிவாயு சிலிண்டர் ரூ. 500-க்கு தருவோம். ஹரியாணா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் வழங்குவோம். இந்தியாவில் உள்ள தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை மக்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசியலமைப்பு தருவது. ஆனால், பாஜக அரசியல் சாசனத்தை தொடர்ந்து தாக்கி வருகிறது. நாட்டில் உள்ள நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் நிரப்பி, ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடம் கொடுக்காமல், அரசியல் சாசனத்தை தாக்குகிறார்கள். இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சமம் என்று அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கோடீஸ்வரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி, பெண்கள் மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால், அது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும்” எனத் தெரிவித்துள்ளார்.