Monday, November 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கிண்டிஅரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கிய நபர்

கிண்டிஅரசு மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவரைத் தாக்கிய நபர்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் மற்றும் அவருடன் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

சென்னை கிண்டியில் கலைஞர் நுற்றாண்டு உயர் சிறப்பு அரசு மருத்துவமனை (KCSSH)செயல்படுகிறது. இன்று (நவம்பர் 13 புதன்கிழமை) காலையில் வழக்கம் போல சிகிச்சைக்காக நோயாளிகள் வந்த வண்ணம் இருந்துள்ளனர்.

மருத்துவமனையின் புற்றுநோய்ப் பிரிவில் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் இருந்துள்ளார். இவர் இத்துறையின் தலைவராக இருக்கிறார். காலை 10.30 மணியளவில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர், மருத்துவர் பாலாஜியை அவரது அறையில் சந்தித்துள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் பாலாஜியை அவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மருத்துவர் பாலாஜி படுகாயம் அடைந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட மருத்துவமனை ஊழியர்கள், தாக்குதலில் ஈடுபட்ட சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த இடத்தில் படுகாயத்துடன் இருந்த மருத்துவர் பாலாஜியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி, “உடலில் நெறிக்கட்டுவதைப் போல கட்டிகள் ஏற்படும் பிரச்னைக்காக தனது தாயை சிகிச்சைக்காக அந்த நபர் அழைத்து வந்தார். அவரது வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன” என்றார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்த மருத்துவர் பார்த்தசாரதி, “அவர் நல்லபடியாக வந்துள்ளார். டாக்டருடன் அரைமணி நேரம் உரையாடியுள்ளார். இதற்கு முன்னதாக தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து தனியாரிடம் சென்று சிகிச்சை அளித்துள்ளார்” என்றார்.

சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தனது தாய்க்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது விக்னேஷ் என்ற நபர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்தார்.

தொடக்கத்தில், இந்தச் சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், “தாக்குதலில் ஈடுபட்ட நபர் தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.

பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய்க்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை தொடர்பாக தனியார் மருத்துவமனையில் கூறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மருத்துவர் பாலாஜி மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments