நெல்லையில் இருந்து சென்னைக்கு இன்று காலை புறப்பட்ட வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில், சாம்பாரில் வண்டுகள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தரமற்ற உணவு வழங்கப்பட்டது குறித்து பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கியது. இந்த ரயில் மொத்தமுள்ள 650 கி.மீ. தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது. திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது. மறு மார்க்கமாக, எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 10.40 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலில் உணவுகள், காபி அல்லது டீ, தண்ணீர் பாட்டில், நியூஸ் பேப்பர் ஆகியவையும் வழங்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, மற்ற 6 நாட்களும் நெல்லை டு சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் 8 பெட்டிகள் உள்ள நிலையில் 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பிய வந்தே பாரத் ரயிலில், பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதில் சாம்பாரில் வண்டுகள் கிடந்ததாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். உணவில் வண்டுகள் கிடந்ததை அடுத்து, பயணிகள், ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தரமான உணவை வழங்காத ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் முறையிட்டனர். ஆனால், ரயில்வே நிர்வாகம், சாம்பாரில் மிதந்தது சீரக மசாலா தான் எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சாம்பாரில் வண்டுகள் மிதந்ததை பயணிகள் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்துள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அண்மையில் நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும், வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் தெரிவித்திருந்தார். கோவையில் இருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில் இரவு உணவில் சிக்கன் மோசமாக இருந்ததாகவும், உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டும் இப்படி தரமற்ற உணவைப் பரிமாறுவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, சேலம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி, சேலத்தைச் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கிய உணவு தான் தரமில்லாத வகையில் இருந்தது என்பதை உறுதி செய்தனர். உணவு தயார் செய்யும் சமையல் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில், நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலிலும் தரமற்ற உணவு தொடர்பாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.