டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வரும் நிலையில், செயற்கை மழை பெய்ய வைத்து காற்று மாசுவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடிதம் எழுதியுள்ளது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு டெல்லியில் காற்று மாசு பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் எனவும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. டெல்லியை பொறுத்தவரை குளிர் கால துவக்கத்தில் வழக்கமாக மழை பெய்வது வழக்கம். மழை பெய்யும் போது காற்று மாசு சற்று குறையும். இதனால் டெல்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு, இதுவரை மழை பெய்யாததால் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளது.
பனிப்பொழிவுக்கு இடையே காற்றின் மாசுவும் அதிகரித்து இருப்பதால் புகை மூட்டம் போல காற்று மாசு நிலவுகிறது. டெல்லியில் இன்று காலை காற்றில் மாசுபாடு அளவை குறிக்கும் தரக்குறியீடு 471 ஆக பதிவானது. காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. காற்று மாசு காரணமாக குறைந்த அளவே கண்ணுக்கு புலப்படுவதால், ரயில் விமன போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்பட்டே வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், விசாரணையை மேற்கொண்டது. 4-ம் செயல் நிலையை மிகத்தீவிரமாக செயல்படுத்த உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு என அனைத்து வகுப்புகளும் தேர்வானது ஆன்லைனில்தான் நடத்தப்படும் என்றும், நேரடி வகுப்புகள் கிடையாது என்றும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் காற்று மாசுவை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் வாகனங்களை அனுமதிப்பது, வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, டெல்லியில் காற்றின் மாசு அபாய கட்டத்தில் உள்ள நிலையில், செயற்கை மழையை பெய்ய வைப்பது தான் தீர்வாக இருக்கும் என்று டெல்லி அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக அனுமதி அளிக்க மத்திய அரசுக்கு கடிதமும் டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எழுதியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெல்லி அமைச்சர் கோபாய் ராய் கூறுகையில், “வட இந்தியாவில் புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இந்த புகையில் இருந்து விடுபட செயற்கை மழை மட்டுமே ஒரே தீர்வு. இது மருத்துவ அவசர சுகாதார நிலை. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் தார்மீக பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.