அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீ வரலாற்றில் இல்லாத பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளனர்.
காட்டுத் தீ அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் பரவி இருக்கிறது. இதனால் சுமார் 150 பில்லியன் டாலர்கள் வரை சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவு சேதம் என தெரிய வருகிறது.
இதில் காப்பீடு பெற்ற சேதம் 20 பில்லியன் டாலர்களாகவும், காப்பீடு பெறாத இழப்பீட்டின் மதிப்பு 100 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என ஜே பி மார்கன் நிறுவனம் கூறுகிறது. எனவே அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிக சேதத்தை ஏற்படுத்திய ஒரு காட்டுத் தீ இது என ஜே பி மார்கன் நிறுவனம் கூறுகிறது. அதாவது கலிபோர்னியாவின் ஆண்டு ஜிடிபி- யில் நான்கு சதவீதம் அளவுக்கு இந்த காட்டுத் தீயால் ஏற்பட்ட இழப்பீடு இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த எதிர்பாராத நிகழ்வால் காப்பீடு பெற்ற மற்றும் காப்பீடு பெறாதவர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . பலரும் தங்களுடைய வீடுகளையும், வாகனங்களையும் இழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 10,000 குடியிருப்புகள் இந்த காட்டுத் தீயால் சேதம் அடைந்திருக்கிறதாம். இதில் ஒரு வீட்டின் சராசரி விலை 3 மில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இந்த காட்டுத் தீ பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. ஏனெனில் இந்த பகுதியை சேர்ந்த அனைவருக்கும் அவர்கள் காப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே இனிவரும் காலங்களில் காப்பீட்டு நிறுவனங்கள் இதுபோல காட்டு தீ ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் வீடுகளுக்கான காப்பீட்டினை வழங்க முன் வராது என சொல்லப்படுகிறது அல்லது அதிக ப்ரீமியம் தொகையை கேட்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் கலிபோர்னியா பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது காப்பீடு திட்டங்களுக்கு அதிக தொகையை செலுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் கலிபோர்னியா பகுதியில் காட்டுத் தீ மட்டும் இல்லாமல் அடிக்கடி சூறாவளி தாக்கமும் நிகழ்கிறது.