அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை கண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று 27 பைசா சரிந்து 86.31 என இந்திய ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.31 என வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறை ஆகும். கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத உயர்வு, வெளிநாட்டு மூலதனம் தொடர்ந்து வெளியேறுதல் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் எதிர்மறையான போக்கு உள்ளிட்டவை இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணம் என வர்த்தக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 86.12 என தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே தொடர்ந்து டாலருக்கு நிகரான மதிப்பில் சரிவு சந்தித்தது. வெள்ளிக்கிழமை அன்று 18 பைசா என ரூபாய் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க பொருளாதார புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளதாலும், ட்ரம்ப் பதவியேற்பால் டாலர் மதிப்பு இன்னமும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் சரிவு இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என வர்த்தக துறையினர் கணித்துள்ளனர்.