Wednesday, March 19, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பகல் 1 மணி வரை 42.41% வாக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 42.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மா.கி.சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்கள் உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.5) காலை 7 மணிக்கு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி நிலவரப்படி 10.95% ஆக இருந்த வாக்கு சதவீதம், 11 மணி நிலவரப்படி 26.03% ஆக இருந்தது. இந்நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 42.41% வாக்குகள் பதிவாகியுள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments