ஹிந்தியால் அழிந்த மொழிகள் பல… மேலும் பல மொழிகள் அழிந்துகொண்டு இருக்கின்றன.
ஹிந்தி திணிப்பால் கடந்த நூற்றாண்டில் அழிக்கப்பட்ட ஒரு சில மொழிகள்: தோக்ரி, துளு, போஜ்புரி, ராஜஸ்தானி, கொங்கனி, ஹரியன்வி, கோர்தா, பார்சி, கர்வாலி. சமீபத்தில் அழிந்த மொழிகள் மட்டுமே இவை.
கொஞ்சம் பின்னே சென்று நூறு ஆண்டுகளை கணக்கிட்டால்.. பீகாரில் மட்டும் 6 மொழிகள் புழக்கத்தில் இருந்தது தெரியும். அவை: போஜ்புரி, மைதிலி, மகை, அங்கிகா, பஜ்ஜிகா, சர்ஜாபூரி. இதில் போஜ்புரியை தவிர மற்ற மொழிகள் 50 ஆண்டுகளுக்கு முன்பே அழிந்து விட்டன. இப்போதும் சில குழுக்களால் அங்கொன்றும் இங்கொன்றும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் எழுத்து வழக்கில் முற்றிலும் அழிந்துவிட்டது. சமீபத்தில் வழக்கொழிந்தது தான் போஜ்புரி.
ஹிந்தி திணிப்பால் அழிந்துகொண்டு இருக்கும் மொழிகள்: பெங்காலி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, உருது. இதில் குஜராத்தியை தவிர மற்ற மொழி மக்களிடையே தங்களின் மொழியை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணம் மிக காலதாமதமாக கடந்த 10 ஆண்டுகளில் பார்க்க முடிகிறது. ஆட்சி குஜராத்திகள் கையில் இருப்பதால் குஜராத்தி மொழியை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.
தப்பிப் பிழைத்து இன்னும் முழுவதுமாக (?) வாழ்ந்துகொண்டு இருப்பது கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ். இவை நான்கும் தென்னிந்திய மொழிகள். ஒரே மொழிக் குடும்பத்தில் இருந்து உருவானவை. இந்த நான்கு மொழிகளின் இருப்பிற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று மக்களின் மொழி உணர்வு. இன்னொன்று எழுத்து வழக்கில் இந்த மொழிகள் நூறு விழுக்காடு புழக்கத்தில் இருக்கிறது. ஒரு மொழி அழிவதற்கு முன்பு அலுவல் வழக்கிலிருந்து அந்த மொழி கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்படும் பின்பு பேச்சு வழக்கில் மட்டும் அது இருக்கும். இன்று ஹிந்தி மொழி தமிழகத்தில் திணிக்கப்பட்டால் உடனே எல்லோரும் ஹிந்தியை பேசப்போவதில்லை. ஹிந்தி அலுவல் வழக்கில் பெரும் இடத்தை பிடிக்கும். பிறகு வேறு வழியின்றி எல்லோரும் ஹிந்தியை கற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவல் வழக்கிலிருந்து ஹிந்தி தமிழை விழுங்க தொடங்கும்.
இன்று “மூன்று மொழிக் கொள்கை தானே, மூன்றாவது மொழி தானே” என்று சாதாரணமாக தோன்றும். ஆனால் மூன்று மொழிக் கொள்கையில் ஹிந்தி மட்டும் தான் மூன்றாவது மொழி என்ற நிலை உண்டாகும். பிறகு மூன்றாவது மொழியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தமிழை விழுங்கி முதல் மொழியாக மாறிவிடும். இது கற்பனை அல்ல. இந்திய ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த எதார்த்தம். சில விஷயங்களை தாமதமாக உணர்ந்து கொண்டாலும் திருத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி விஷயத்தில் தாமதமாக இதை உணர்ந்தால் திருத்திக் கொண்டு நம் மொழியை மீட்டெடுக்க முடியாது ஏனென்றால் ஹிந்தி அந்த நேரத்தில் முழுவதுமாக புழக்கத்தில் வந்திருக்கும்.