அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகளுக்கு வரி விதித்துள்ளார். இலங்கைக்கு 44 விழுக்காடும் பங்ளாதேஷுக்கு 37 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும், வர்த்தகர்களிடையே தலைதூக்கியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். உற்பத்தித் துறையில் சக்திவாய்ந்த நாடுகளுடன் இனி போட்டிபோட முடியுமா என்ற கவலை பங்ளாதேஷ், இலங்கை வர்த்தகர்களிடையே எழுந்துள்ளது.
குறைவாக வரி விதிக்கப்பட்ட நாடுகள், தொழில்துறையைப் பொறுத்தவரை கூடுதல் சக்திவாய்ந்த நாடுகள், ஆகியவற்றுக்கு ஏற்றுமதி ஒப்பந்தங்கள் செல்லக்கூடும் என்று வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர்.
“44 விழுக்காடு என்பது சாதாரணமன்று, எங்களுக்கான மரணக் குறிப்பைத் தயார் செய்யவேண்டியதுதான்,” என்று இலங்கையின் கூட்டு ஆடை தயாரிப்பு நிறுவனச் சங்கக் கூட்டமைப்பின் ஆலோசகர் துலி கூராய் கவலை தெரிவித்தார்.
இலங்கை, பங்ளாதேஷ் போன்ற நாடுகளில் செயல்படும் உற்பத்தி நிறுவனங்களைக் குறிவைப்பது, அவற்றின் பொருளியலை மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சுமையையும் அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பங்ளாதேஷ் ஆடை தயாரிப்பாளர்கள், ஏற்றுமதிச் சங்கத்தின் முன்னாள் இயக்குநரான மொகியுதின் ரூபெல், “உலகப் பொருளியல் மீண்டுவரத் தொடங்கி அமெரிக்காவுக்கான எங்கள் விற்பனை அதிகரித்துவந்த வேளையில் வர்த்தகப் போர் அல்லது வரிப் போர் புதிய சவாலையும் நிலையற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது,”. அமெரிக்காவுக்கு மட்டுமே ஆடைகளைத் தயாரிக்கும் பல ஆலைகள் பங்ளாதேஷில் செயல்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் ஆடை தயாரிப்புத் துறை நிறுவனங்கள் 3,50,000க்கும் அதிகமானோரை வேலைக்கு எடுத்துள்ளன. நைக்கி, விக்டோரியா சீக்ரட் போன்ற பிரபல நிறுவனங்களின் ஆடைகளும் இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை பொருளியல் தரைமட்டமானது. அதற்குப் பிறகு அனைத்துலகப் பண நிதியம், இந்தியா போன்ற அண்டை நாடுகளின் உதவியோடு இலங்கைப் பொருளியல் படிப்படியாக சீராகி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.