குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி திடீரென ராஜினாமா செய்தார். அவர் மார்ச் மாதத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் இந்த திடீர் ராஜினாமாவிற்கு பின் பல காரணங்கள் , உள் விவகாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
74 வயதாகும் தன்கர் தனது உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், “என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.