சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள இரண்டு நிறுவனங்கள் தமிழ் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
ஃபார்மர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிடிஇ லிமிடெட் என்ற நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையையும், கூலி திரைப்படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகளையும், மேலும் உணவு மற்றும் பானங்களுக்கு 30 சிங்கப்பூர் டாலரும் வழங்கும் என அறிவித்துள்ளது. இதை ஊழியர் நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை நடவடிக்கை என நிறுவனம் விளக்கியிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மற்றொரு சிங்கப்பூர் நிறுவனமான எஸ்பி மார்ட், ஆகஸ்ட் 14 அன்று காலை 7 மணி முதல் 11:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இயக்குநர் கிருஷ்ணன் பிரகாஷ் நம்பியார், காலை 11:30 மணி முதல் வழக்கம் போல் வணிகம் தொடங்கும். சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஆமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக முன்பதிவுக்கான டிக்கெட் விற்பனை வியக்கத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 14 அன்று 100 நாடுகளுக்கு மேல் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.