தமிழ்நாட்டில் தற்போது சாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி சமதா கட்சியின் அனைத்திந்திய தலைவர் குமரிநம்பி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. விழிப்புணாவு பெற்ற, முற்போக்கு சிந்தனையுடைய மாந்தர் நிறைந்த இந்திய ஒன்றியத்தின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. ஆயினும் சாதியக் கட்டமைப்பு வலுவாகப் பின்னிப் பிணைந்து தமிழ்நாட்டின் விரைவான வளர்ச்சிக்குப் பெருந்தடையாய் உள்ளது.
அடையாளமற்ற. அடிப்படைக் கூறுகளற்ற சாதியத்தை வளர்த்தெடுத்து தமிழர் ஓரணியில் திரளாமல் பல கூறுகளாகச் சிதறடிக்கப்படுகின்றனர். சாதி. சமயமற்றத் தமிழினம் நவீன வளர்ச்சிக் காலத்தில் இவைகளுக்குள் சிக்கிச் சீரழிகின்றது. நம்பிக்கையின் அடிப்படையிலான. வழிமுறைகளை. நடைமுறைகளைக் கொண்டு இயங்கி வரும் சமயங்கள் தோற்றப் பொலிவைக் கொண்டு இயங்கிவரும் சாதியக் கட்டமைப்பிற்குள் சிக்கித் திணறுகிறது.
சாதியம் ஏற்றத் தாழ்வுகளை முன்னிறுத்தி மாந்தரைப் பிளவுபடுத்தி. அடிமைப்படுத்துகிறது. குறிப்பாக, சமயத்தின் பெயரால் சனாதனம் என்னும் கோட்பாடு இந்திய ஒன்றியம் முழுவதையும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்குள் பிணைத்து, வழிபாடு, கல்வி என்னும் தளங்களைச் சீர் குலைத்துள்ளது.
சாதி ஆணவக் கொலைகளின் பின்னணியில் சனாதனத்தின் ஆதிக்கம் முதன்மையானது.
திரைப்படங்கள் சாதியக் கட்டுமானங்களை வலுவாக்கி மாந்தர் சிந்தனையை முடமாக்குகிறது. நாட்டிற்காக உழைத்த, தன்னலம் கருதாமல் சிந்தித்தத் தலைவர்கள் சாதி வளையத்திற்குள் இணைக்கப்பட்டு சாதியவாதிகளின் முத்திரையாக வெளிக்காட்டப்படுகின்றனர். பள்ளிப் பருவத்திலேயே மாணாக்கரிடம் சாதிய சிந்தனைகள் ஊட்டப்படுகின்றன.
கல்வி நிறுவனங்கள் வேலை தேடித்தரும் முகவர்களாக மாறி வேலைக்கானப் படிப்பை. உணர்வை முன்னெடுப்பதால் ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட சிந்தனை, வாழ்க்கை முறை இல்லாமல் ஆகிறது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் தொழில் முனைவோராக மாணாக்கர் உருவாக்கப்பட வேண்டும்.
தற்சார்பு நிலைப் பொருளியல் தன்னிறைவு. கூட்டு வாழ்க்கை முறை என்னும் அடிப்படைத் தன்மை வளர்க்கப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசு விரைந்த. சிறந்த நடவடிக்கை எடுத்து சாதி ஆணவக் கொலைகளை தடுத்திட வேண்டும்.
உலகிற்கே வழிகாட்டியாக விளங்கும் தமிழ்நாடு பிற்போக்குத் தனங்களைக் கைவிட்டு. முற்போக்கு நிலைக்கு வரவேண்டும். இதற்குத் தடையாய் இருக்கும் சாதிய விலங்குகளை அறுத்தெறிந்திட வேண்டும். எனவே, சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்திட தமிழ்நாட்டில் தனிச் சட்டம் இயற்றிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.