Wednesday, September 10, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedநேபாளம் - ஜென் Z போராட்டக்காரர்கள் நிபந்தனை

நேபாளம் – ஜென் Z போராட்டக்காரர்கள் நிபந்தனை

காத்மாண்டு

நேபாளத்தில் இளம் தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்ததன் காரணமாக அந்நாட்டுப் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், நேபாள அதிபர் ராம் சந்திர பவுடேல், ஜென் z போராட்டக்காரர்களை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போராட்டக்காரர்களிடம் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், நேபாளத்தில் அமைதி திரும்ப போராட்டக்காரர்கள் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். அவை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய நிபந்தனைகள்:

1.     பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும்.

2.     குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும்.

3.     விரைவில், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும்.

4.     கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோத சொத்துகள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டும்.

5.     அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் தேவை. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீதித்துறை, பாதுகாப்பு, தொலைதொடர்பு துறைகளில் சீர்திருத்தம் தேவை. ஆகிய கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 19 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் இனியும் வன்முறை சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதில் ராணுவம் கவனமாக செயல்பட்டு வருகிறது.

சூழல் இவ்வாறாக இருக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பயண எச்சரிக்கை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் அவரவர் இருக்குமிடங்களிலேயே பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளது. தேவையில்லாமல் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. நேபாளத்துக்கான இந்திய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியா – நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற கர்நாடகாவைச் சேர்ந்தவர்களின் நிலை என்னவானது என்ற கேள்வி நிலவிய நிலையில், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக கர்நாடகா முதல்வர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

போராட்டத்தின் பின்னணி: சமூக வலைதளங்களில் அண்மையில் ‘‘நெப்போ பேபி’’ என்ற பெயரில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இதை பொதுமக்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்தச் சூழலில் பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்டாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களாக 28 வயதுக்கு உட்பட்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் குவிந்து ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து நேபாளம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்தனர்.

நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி ஹெலிகாப்டரில் பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றார். இந்த சூழலில் பிரதமர் சர்மா ஒலி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments