காத்மாண்டு
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகவே வன்முறை தொடர்கிறது. மக்கள் போராட்டம் அங்கு வன்முறையாக வெடித்துள்ள சூழலில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கிறது. இதற்கிடையே அமைச்சர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் தொங்கியபடி தப்பித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்நாட்டு மக்கள் மிகப் பெரியளவில் போராட்டத்தில் குதித்தனர். அந்த போராட்டம் திடீரென வன்முறையாகவும் வெடித்தது. தொடர்ந்து சமூக வலைத்தள தடை நீக்கப்பட்டாலும், போராட்டங்கள் தொடர்ந்தது. இதனால் வேறு வழியில்லாமல் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேற நேரிட்டது.
ஆனால், அதன் பிறகும் கூட நேபாளத்தில் வன்முறை தொடர்கிறது. அங்கு அரங்கேறும் வன்முறை தொடர்பாகப் பல பகீர் வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது. அங்கு நிலைமை கையை மீறிச் சென்றுவிட்ட நிலையில், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. போலீசாரால் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியாததால் ராணுவம் களமிறங்கியுள்ளது. ஒவ்வொரு வீதிக்கும் சென்று நேபாள ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் மக்கள் வீட்டிலேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம் போராட்டக்காரர்களில் ஒரு கும்பல் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகளின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள். அப்படி தான் ஒரு கும்பல் அரசு அதிகாரிகளின் வீடுகளைச் சூறையாடியதுடன், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் தீ வைத்தது. நேபாள நாட்டின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங்கின் வீட்டிற்கும் அவர்கள் தீ வைத்தனர். துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பிஷ்ணு பவுடல், நேபாள மத்திய வங்கியின் ஆளுநர் பிஸ்வோ பவுடல் ஆகியோரின் வீடுகளின் மீது கல்வீச்சு நடந்தது. முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கின் வீட்டையும் தாக்கியுள்ளனர்.
நேபாள நிதியமைச்சர் போராட்டக்காரர்களால் துரத்தப்பட்டு, சாலையில் எட்டி உதைக்கப்படும் வீடியோ கூட இணையத்தில் வெளியாகி இருந்தது.
மற்றொரு வீடியோவில், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அர்ஜு ராணா தேவ்பா மற்றும் அவரது கணவரும், முன்னாள் பிரதமருமான ஷேர் பகதூர் தேவ்பா ஆகியோர் தாக்கப்பட்டது பதிவாகியிருந்தது.
இதனால் தாக்குதலுக்கு உள்ளாகும் அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் காப்பாற்றும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியுள்ளது. அப்படி தான் அங்குள்ள அமைச்சர் ஒருவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. வன்முறையாளர்கள் அவர்களைச் சூழ்ந்த நிலையில், கயிறு மூலம் அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் மீட்கப்பட்டனர்.
ஹெலிகாப்டர் பறக்கும்போது, கயிற்றை பிடித்துக் கொண்டு அவர்கள் அந்தரத்தில் பறக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. காத்மாண்டுவில் அந்த ஹெலிகாப்டர் பறந்த நிலையில், கீழே புகை மண்டலம் காணப்பட்டது. வன்முறை தொடர்ந்த நிலையில், அமைச்சரும் அவரது குடும்பத்தினரும் மீட்கப்பட்டுள்ளனர்.
சமீப காலங்களில் இதுபோல பல சம்பவங்களை நேபாளத்தில் பார்க்க முடிகிறது. அரசின் மீது மக்கள் அதீத கோபத்தில் இருக்கும் சூழலில், அதன் காரணமாகவே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடக்கிறது. இந்தச் சூழலில் தான் அந்நாட்டின் மாஜி தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைகிறது. இதனால் அங்கு வன்முறை படிப்படியாகக் கட்டுக்குள் வரும் எனத் தெரிகிறது.