Monday, October 13, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகரூர் கூட்ட நெரிசல் விவகாரம் - தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய...

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய  உச்சநீதிமன்றம் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழக அரசு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில், காவல் துறையின் அறிவுறுத்தலின்படியே நெரிசல் ஏற்பட்ட இடத்தில் இருந்து விஜய் வெளியேறினார் என வாதாடப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பில், பரப்புரையில் ரவுடிகள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சிபிஐ போன்ற பொதுவான ஒரு அமைப்பு விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் நெரிசல் சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே காரணம் என அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. 12 மணிக்கு வருவதாக கூறிவிட்டு மிகத் தாமதமாக வந்ததே காரணம் என்றும் குறிப்பிடப்பட்டது. அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே சிபிஐ தேவை என்றும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவே போதும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரவுடிகள் நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்று மறுப்பு தெரிவித்ததுடன், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் இரவில் நடத்தப்பட்ட உடற்கூராய்வில் எந்தத் தவறும் இல்லை என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு அனுமதியுடன் இரவில் பிரேதப் பரிசோதனை நடத்தலாம், இது வழக்கமான ஒன்றுதான் என்றனர். உடற்கூராய்வுக்கு எத்தனை மேசைகள் இருந்தன, மருத்துவக் கட்டமைப்பு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பிக்கவும் அனுமதி அளித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

அதேபோல், பரப்புரை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கு நிலையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு உயிரிழப்பு தொடர்பான விவகாரம் என்பதால் நீதிமன்ற பதிவாளர் உரிய நீதிபதி முன் பட்டியலிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை கிளை, சென்னை நீதிமன்றம் ஆகியவை ஒரேநாளில் வேறு வேறு உத்தரவை எப்படி பிறப்பித்தன என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

- Advertisment -

Most Popular

Recent Comments