3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை சென்னை ஆலந்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நியாய விலைக்கடைகளில் வரும் 13 ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.



