சட்டசபையில் இவ்வாண்டிற்கான முதல் கூட்டத் தொடரின் 5-ஆம் நாள் இன்று நடைபெற்று வருகிறது.
கடந்த 20-ஆம் தேதி சட்டசபை கூடிய நிலையில், ஆளுநர் உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இம்முறையும் அவருடைய உரையைப் படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
5-ஆம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “சிக்கல்கள் மிகுந்த சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தமர்ந்தது. ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மற்றொரு பக்கம் கவலையும் எங்களுக்கு இருந்தது.
ஒன்றிய பாஜக அரசின் செயல்களால்தான் கவலையில் இருந்தேன். ஆனால், இப்போது தமிழகம் அத்தனை துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
விடியலை மக்கள் அனைவரும் பார்க்கின்றனர். 2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. ரூ. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
ஆட்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.35 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகாலக் கோரிக்கையை ஏற்று, ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
விடியல் பயணத்தின் மூலமாக ஒவ்வொரு மகளிரும் 60,000 ரூபாய் சேமித்துள்ளனர். சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. அரசு பொறுப்பேற்று, 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன். திமுக அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் மீண்டும் ஒரே காரணத்தைக் கூறி சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்து வருகிறார்.
அவரின் செயல் எங்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. நாட்டின் மீது அளவற்ற மரியாதை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்களுக்கு தேசபக்தி பற்றி பாடமெடுக்க வேண்டாம். சோதனைகள் எங்களுக்குப் புதிதல்ல.
சோதனைகளைக் கடந்து வென்றவர்கள் நாங்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்” எனப் பேசியிருக்கிறார்.



