தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண்மை பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “ஒரு வாரத்திற்கு முன்னால் சென்ற வெள்ளிக்கிழமை 6:32 மணிக்கு தமிழ்நாடு எங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்றிடும் 1.31 கோடி மகளிரின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்படும் அந்தப் பணி தொடங்கி வைக்கப்பட்டது. வானில் சூழ்ந்திடும் கருமேகங்களை விலக்கி கதிரவன் தன் ஒளியைப் பரப்பத் தொடங்குவது போல சிறுமதியாளர்களின் தடையைத் தகர்த்து மகளிரின் உரிமையை நிலை நாட்டிட முதல்வர் எடுத்திட்ட அந்தச் செயலைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்கிறது. இது துல்லிய தாக்குதல் அல்ல. ஒரு தாயுமானவரின் அன்பான அரவணைப்பு.
நீங்கள் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 நாங்கள் கொடுப்பதை நிறுத்த முயற்சித்தால் நான் ரூ.5000 மாக அதைத் தருவேன் என்று நம்முடைய முதலமைச்சர் எடுத்த முடிவு இன்று மகளிர் மனம் குளிர்ந்து வாயார வாழ்த்தும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வு இன்னும் ஒரு உண்மையையும் உணர்த்திச் செல்கிறது. சுயமரியாதை திருமணம், சட்ட அதிகாரம், இருமொழிக் கொள்கை. அதே போல நம் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று சூட்டி இவற்றுக்கு ஏதேனும் பங்கம் வந்தால், பாதகம் வந்தால் மக்கள் கொந்தளித்து விடுவார்கள் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்படும். அந்த அச்சம் இருக்கும் வரை இந்த நாட்டை ஆள்வது பேரறிஞர் அண்ணா தான் என்று உரக்கச் சொன்னாரே!
அதைப் போலச் சமூக நீதிக்கு எப்போதெல்லாம் பங்கம் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடு உரத்துக் குரல் கொடுக்கும். அந்தக் குரல் எப்போதும் முத்தமிழறிஞர் கலைஞரின் கம்பீரக் குரலைத் தான் எதிரொலிக்கும். அதே போலத்தான் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை யாரேனும் நிறுத்த முற்பட்டால் தமிழ்நாடே கொந்தளிக்கும். அந்தக் கொந்தளிப்பு உணர்வு இருக்கும் வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்வது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்” என தெரிவித்தார்.



