Friday, March 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedதமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் - கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை

தமிழகத்தில் 15% உணவகங்கள் மூடல் – கள்ளச்சந்தையில் சிலிண்டர் ரூ.6,000-க்கு விற்பனை

சென்னை

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாட்டால், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கள்ளச்சந்தையில், வணிக சிலிண்டர் விலை ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தீவிரத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி, விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரவ பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, வர்த்தக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை உட்பட பல நகரங்களில் உணவுகளை தயாரித்து வழங்கும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல்களில் விற்கப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வணிக சிலிண்டர் இல்லாததால், ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் 15 சதவீதம் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சென்னையில் 215 சிறிய மற்றும் நடுத்தர ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெரிய அளவிலான ஹோட்டல்கள் விறகு மற்றும் மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன. சென்னை தவிர்த்து பிற நகரங்களில் பெரும்பாலானோர் மாற்று எரிபொருளுக்கு மாறியுள்ளனர்.

மேலும் காஸ் சிலிண்டர் வருகையைப் பொறுத்து அவ்வப்போது ஹோட்டல்களை திறப்பதும், உணவு வகைகளை கணிசமாக குறைத்தும் விற்பனையை மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் இதுவரை தோராயமாக 300-க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள், அதாவது மொத்தம் உள்ள கடைகளில் 15 சதவீதம் என்ற அளவில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளச்சந்தையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக் கான சிலிண்டர் விலை ரூ.2,043.50 ஆகும். இது தற்போது ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை கள்ளச்சந்தையில் கிடைக்கிறது.

தேநீர் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில் “வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் கிடைக்கவில்லை, கள்ளச்சந்தையில் இந்த சிலிண்டர் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனவே மின் அடுப்புக்கு மாறிவிட்டோம். மேலும் வடை, பஜ்ஜி, சமோசா, போண்டா போன்றவற்றை தயாரிப்பதை நிறுத்திவிட்டோம்” என்று தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments